போபால்: மேற்கு வங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூதாட்டி, தற்போது வங்காளதேசத்தில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கங்காசாகர் மேளா திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் வழிதவறிய அவர், தவறுதலாக வங்கதேசம் செல்லும் படகில் ஏறியதால் எல்லை தாண்டிச் சென்றுவிட்டார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் இறந்துவிட்டதாகவே குடும்பத்தினர் கருதி வந்தனர்.
இந்நிலையில் வங்கதேசத்தில் ஆதரவின்றித் தவித்த அவரை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ‘ஹாம்’ வானொலி அமைப்பினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர். வங்கதேசத்தின் சாபாய் நவாப்கஞ்ச் பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த மூதாட்டி, அடிக்கடி ‘சாகர்’ என்ற பெயரை மட்டும் கூறி வந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த மேற்கு வங்க வானொலி மன்றத்தினர், அங்கு சென்று விசாரித்ததில் அவர் காணாமல் போன இந்தியப் பெண் என்பது உறுதியானது. இதையடுத்து டெல்லியில் வசிக்கும் அவரது மகன்களான ராஜேஷ் மற்றும் கணேஷ் ஆகியோரைத் தொடர்பு கொண்டு காணொளி வாயிலாகப் பேச வைத்தனர்.
திரையில் தனது தாயைக் கண்டதும் மகன்கள் அடையாளம் கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து வானொலி மன்றத்தினர் கூறும்போது, ‘தாயும் மகன்களும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்துக்கொண்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் மூதாட்டியை விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.
