- செங்கோட்டையன் கட்சி அலுவலகம்
- ஜே. சொட்டு
- கோபி
- கே.ஏ.
- செங்கோட்டையன் கட்சி அலுவலகம்
- கரட்டூர்
- கோபி, ஈரோடு மாவட்டம்
- அமைச்சர்
- அண்ணா
கோபி: கோபியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் மாற்றப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலக முகப்பில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் மற்றும் கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகம் என்ற பெயரில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்து ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து பேசியதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். நேற்று தன் ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு தவெகவில் உயர்மட்ட மாநில குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கோபி கரட்டூரில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மாற்றப்பட்டது. அந்த பிளக்ஸ் பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, காமராஜர், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் மற்றும் செங்கோட்டையன் படம் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற வாசகத்துடனும், தமிழக வெற்றிக் கழகம், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏ, சாதனை செம்மல் கே.ஏ.செங்கோட்டையன், தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச்செயலாளர் அலுவலகம், கோபிச்செட்டிப்பாளையம்’’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
