*சீரமைக்க கோரிக்கை
சாயல்குடி : கடலாடி அருகே குண்டும் குழியுமான, சேறும், சகதியும் நிறைந்த சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலாடி-சாயல்குடி சாலையில் தேவர் மகால் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த பத்தாண்டு காலமாக சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வருவதால் சேறும், சகதிமாய் கிடப்பதால் தெருவில் நடக்கக்கூட முடியாத நிலையில் மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.
நடந்து செல்ல கூட முடியாத சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து காயம் படும் நிலை உள்ளது. தினசரி இந்த சாலையில் மாணவ, மாணவிகள் சேற்றில் நடந்து பள்ளிக்குச் செல்லும் அவல நிலை இருப்பதாக கூறுகின்றனர்.
எனவே சாலை அமைக்க வேண்டி தெருச்சாலையில் பெண்கள் குலவையிட்டு நாற்று நட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். சேற்றில் நடந்து செல்வதால் கால்களில் சேற்று புண், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்களால் மாணவர்கள் பாதிக்கபட்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் வசதியுடன் சிமிண்ட் சாலை அல்லது பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
