×

அடிப்படை வசதிகள் இல்லை கருவேலம் காடாக மாறிய சுனாமி குடியிருப்பு

* 60 சதவீத வீடுகள் பூட்டி கிடக்கின்றன

* நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுனாமி குடியிருப்பு கருவேல மரங்கள் சூழ்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் 60 சதவீத வீடுகள் பூட்டி கிடக்கின்றன.

ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்டது ஏ.மணக்குடி. இங்கு கடலோர பகுதியில் உள்ள பொதுமக்கள் சுனாமி போன்ற பேரிடர்களில் சிக்கி தவிக்க கூடாது என்பதற்காக குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக கடந்த திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பீட்டில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இவை பெரும்பாலும் வீடுகள் இல்லாத பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யாமல், சில அதிகாரிகள் முறைகேடாக வீடுகள் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயனாளிகள் வீடுகளை பயன்படுத்த முன்வராமல் பூட்டியே வைத்துள்ளனர். சுமார் 60 சதவீதம் வீடுகளுக்கு மேலாக பூட்டியே கிடக்கின்றன. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

இந்த சுனாமி குடியிருப்பு பகுதி திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. எனவே அதற்கு பின் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அப்பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. இதனால் பயனாளிகள் குடியேறாமல் முறையான பராமரிப்பு இன்றி வீடுகளை சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.

எனவே சுனாமி குடியிருப்பை சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும், அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும், வீடுகளை உண்மையான பயனாளிகளுக்கு வழங்கி குடியமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடுகள் இருப்பதால் அவர்கள் அந்த வீடுகளை விட்டு விட்டு இங்கு குடியேறாமல் புறக்கணித்து வருகின்றார்கள். ஒரு சிலர் இங்கு சரியான அடிப்படை வசதி இல்லை என கூறி குடியேற மனமின்றி உள்ளனர்.

எத்தனையோ கடலோர கிராம மக்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்து, குடியிருப்பை சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’’ என தெரிவித்தனர்.

குடிநீர் குடம் ரூ.15

இங்கு குடியிருக்கும் பயனாளி கூறுகையில், ‘‘இங்கு வீடு கட்டி கொடுத்த பின்னர் திமுக ஆட்சி காலம் முடிந்து விட்டது. அதற்கு பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முன்வரவில்லை.

சீரான மின்சாரம் வராமல் மின் விசிறி, மிக்ஸி, கிரைன்டர் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்தது. சரியான குடி தண்ணீர் வசதியின்றி டேங்கர்களில் வரும் தண்ணீரை தான் குடம் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரையிலும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம், குடி தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Tsunami ,Karuvelam ,R.S. Mangalam ,Karuvela ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...