*வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் புதிய யுக்தி
சிவகிரி : சிவகிரி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகளை டிரோன் கேமரா கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளது.
இவை அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து கரும்பு, வாழை, நெல் தென்னை, கொய்யா, மாமரங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. சுமார் 500 ஏக்கர் வரை பயிர்கள் நாசமானதால் லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த 19ம் தேதி சிவகிரி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கை குறித்து விவசாயிகள் மனு அளித்தனர். இந்நிலையில் கடந்த 21ம் சிவகிரி தாசில்தார் அப்துல்சமது தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை துரித நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த 22ம் தேதி சிவகிரி மேற்கு தொடர்ச்சிமலையடிவாரத்தில் உள்ள வழிவழி குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் போக்கு காட்டியது. இதனால் வனத்திற்குள் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே ராசிங்கபேரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை யானைகள் கூட்டம் கடந்து வந்து விளைநிலங்களுக்குள் புகுந்து கரும்பு, தென்னை, வாழை, கொய்யா, மாமரங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட சிவகிரி பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலரும், விவசாய தொழிலாளர் சங்க பொருளாளருமான அருணாச்சலம் சிவகிரி வனச்சரக அலுவலக வாசலில் நேற்றுமுன்தினம் தற்கொலைக்கு முயன்றார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் நெல்லை நாயகம், யானை நண்பர்கள் குழு மூலம் யானைகளை விரட்டுவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படும். பல்வேறு பகுதிகளில் உள்ள வனக்குழுக்களை சிவகிரி பகுதிக்கு அனுப்பி வைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். யானைகளால் பாதிக்கப்பட்ட விளைபொருட்ளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில் நேற்று வனச்சரகர்கள் கதிரவன், ஆறுமுகம், வனவர் பிரகாஷ், உயிரியலாளர் கந்தசாமி, வன காவலர்கள் மாரியப்பன், ஆனந்த், வேட்டை தடுப்பு காவலர்கள் சரவணன், பாலசுப்பிரமணியன், யோகநாதன் மற்றும் வனத்துறை சிறப்பு குழு, யானை நண்பர்கள் குழுவினர், சிவகிரி வழிவழிக்குளம் ராசிங்கப்பேரி சின்ன ஆவுடைபேரி, பெரிய ஆவுடைப்பேரி, சுனாப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று டிரோன் கேமராக்கள் மூலம் யானைகள் இருக்கும் பகுதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
கேமராக்கள் மூலம் கண்காணித்த பிறகு யானைகளை அப்பகுதிகளில் இருந்து வனத்திற்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறை திட்டமிட்டுள்ளனர்.
