காத்மண்ட்: இந்தியா- சீனா-நேபாளம் எல்லையில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதியை நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. இதனை இந்தியா நிராகரித்துவிட்டது.
இருப்பினும், இந்த பகுதிகளை உள்ளடக்கிய வரைபடம் கொண்ட புதிய ரூ.100 நோட்டை நேபாளம் வெளியிட்டுள்ளது. நேபாள நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் இந்த நோட்டுகள் வெளியாகியுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கு இடையே உறவு மோசமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட வரைபடத்தை கடந்த 2020ம் ஆண்டு நேபாளம் நாடாளுமன்ற ஒப்புதலின் மூலமாக புதுப்பித்தது. இந்த பகுதிகள் நேபாளத்திற்குள் இருப்பதாக வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரைபடத்துக்கு இந்தியா கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தது.
இருப்பினும் புதிய 100 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது நேபாளத்தின் புதிய 100ரூபாய் நோட்டில் இடது பக்கத்தில் எவரெஸ்ட் சிகரம் உள்ளது. வலது பக்கத்தில் நேபாளத்தின் தேசிய மலரான ரோடோடென்ட்ரான் குறிக்கப்பட்டுள்ளது. இதன்மத்தியில் நேபாளத்தின் மங்கலான பச்சை நிற வரைபடம் உள்ளது.
