×

குடியுரிமையை பிஎல்ஓ தீர்மானிப்பதா? வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தேர்தல் ஆணையம் வரம்பு மீறுகிறது: உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்

புதுடெல்லி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்து மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடினார்.

அவர்கள் கூறியதாவது:
தேர்தல்களை ஒழுங்குபடுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் போர்வையில், தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் அதிகாரங்களை மீறி செயல்படுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு மட்டுமே உள்ள சட்டமியற்றும் அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைத் தவிர வேறெந்த படிவங்களையும் தேர்தல் ஆணையம் உருவாக்க முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் படிவம் 4, 6 மற்றும் 7 உள்ளிட்டவை மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதைத் தாண்டி தேர்தல் ஆணையம் தனது சொந்த படிவங்களை உருவாக்க முடியாது.

எஸ்ஐஆரை நடத்துவது குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டது. அதை பல இடங்களுக்கும் ஒரே நேரத்தில் நடத்த சட்டத்தில் இடமில்லை. 1960ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி, படிவம் 7ன் கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஒரு பெயரைச் சேர்ப்பதற்கு யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் மட்டுமே, பிரிவு 326ன் கீழ் தேர்தல் ஆணையம் குடியுரிமையை சோதிக்க முடியும். இப்படியிருக்க, ஒரு ஆசிரியரை பிஎல்ஓவாக நியமித்து அவர் அனைவரின் குடியுரிமையை தீர்மானிப்பது எப்படி நியாயமாகும். ஒருவரின் குடியுரிமையை முடிவு செய்ய வேண்டியது ஒன்றிய உள்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதற்கு வெளிநாட்டினர் சட்டம், குடியுரிமை சட்டங்கள் உள்ளன. இதில் தேர்தல் ஆணையம் எப்படி தலையிட முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

ஆதார் வாங்கிய வெளிநாட்டினர் ஓட்டுபோட முடியுமா?
குடியுரிமைக்கான உறுதியான சான்றாக ஆதார் அட்டையை கருத முடியாது. போலியாக அல்லது மோசடியாக ஆதார் அட்டை வாங்கியதால், ஊடுருவல்காரர் ஒருவரால் ஓட்டளிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்போது நீதிபதிகள் கூறும்போது,’ ஆதார் என்பது குடியுரிமைக்கான உறுதியான சான்று இல்லை. வெளிநாட்டை சேர்ந்தவர் ஒருவர் போலியாக அல்லது மோசடியாக அவர் ஆதார் வாங்கியிருக்கலாம். அதற்காக அவரை ஓட்டளிக்க அனுமதிப்பீர்களா? எனவே, ஆதார் என்பது அடையாள ஆவணம் மட்டுமே’ என்றனர்.

Tags : PLO ,Election Commission ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,Chief Justice ,Suryakanth ,Justice ,Joymalya Bagchi ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...