×

2009ல் ஐகோர்ட்டில் வழக்கறிஞர்களை தாக்கிய சம்பவம் 28 வழக்கறிஞர்கள், 4 காவல்துறை அதிகாரிகள் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கறிஞர்கள் சிலர் அழுகிய முட்டையால் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதுதொடர்பான வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களை கைது செய்த போது காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, வழக்கறிஞர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், ரஜினிகாந்த், புருஷோத்தமன் உள்ளிட்ட 28 வழக்கறிஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்தார். அப்போது, இந்த மோதல் சம்பவத்தின் போது நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தானும் ஒரு வழக்கறிஞராக இருந்து நேரில் பார்த்ததாக குறிப்பிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, மனுதாரர்கள் அனைவரின் மீதான வழக்கும் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். இதனால், கடந்த 16 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

Tags : Madras High Court ,Chennai ,Janata Party ,Subramanian Swamy ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!