×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 29ம் தேதி (நாளை) திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்,‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags : DMK ,CM ,MK Stalin ,Chennai ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...