×

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கட்சி பாஜ: திருமாவளவன் தாக்கு

மதுரை: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கட்சி பாஜ என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: நாடு முழுவதும் பேசுபொருளாக இருப்பது அரசியலமைப்பு சட்டம் தான். பாஜ ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், அது பேசுபொருளாக மாறியிருக்காது. இன்று அரசியலமைப்பு சட்ட நாள் என்பது அரசு விழாவாக நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தாலும், அதை நீர்த்துப்போக செய்வதற்கான அனைத்து சதிகளையும் தொடர்கிறது. குடியுரிமை சட்டத்திருத்தம், ஜம்மு, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது, எஸ்ஐஆர் நடைமுறை உள்ளிட்ட அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவைதான். குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது.

பீகாரில் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 43 லட்சம் பேரில் ஒருவர் கூட வேறு நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. இதில் 37 லட்சம் பேர் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களை குடியுரிமை இல்லாதவர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். வாக்காளர் பட்டியல் சீராய்வு என்ற பெயரில், குடியுரிமை திருத்த சட்டத்தை தேர்தல் ஆணையம் மூலம் நிறைவேற்றி இந்து ராஷ்டிரம் அமைக்க முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கழகங்கள், அம்பேத்கரியம், பெரியாரியம் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள். பாஜ, ஆர்எஸ்எஸ் சராசரியான கட்சியோ, இயக்கமோ அல்ல. அவர்களின் நோக்கமே அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்பது தான். இதனால் அவர்களின் உண்மையான எதிரிகள் தேர்தல் களத்தில் உள்ள கட்சிகள் அல்ல. கருத்தியல் சக்தியாக உள்ள அரசியலமைப்பு சட்டம் தான்.

தமிழ்நாட்டில் முன்பு அனைத்து சமூக இயக்கங்களும் ஒன்றாக ஒரே மேடையில் இருந்திருக்கிறோம். ஆனால், இன்று அனைவரையும் பிளவுபடுத்தி அதன் மூலம் மத வெறியை வளர்க்கிறார்கள். சாதியை வளர்த்தால் தான் இந்து என்கிற உணர்வை வளர்க்க முடியும். இன்று தலித் இயக்கங்களுக்குள் ஊடுருவி சாதி பெருமை பேச வைத்து நம்மை சிதைத்து விட்டார்கள். இவற்றையெல்லாம் உணர்ந்து தான், திமுக கூட்டணியில் விசிக உறுதியாக இருக்கிறது. சில சீட்டுக்காக நாங்கள் கூட்டணியில் இருப்பதாக, சில அற்பர்கள் சொல்கிறார்கள். பாஜவுக்கு எதிரான திட்டங்களை திமுக இயக்குவதால் உடன் நிற்கிறோம். இந்தியாவில் பிற மாநிலங்கள் போல் தமிழ்நாட்டில் மதவாத அரசியல் மேற்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தில் தான் ஆளுநர் ரவி தமிழ்நாடு தனித்து நிற்பதாக பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு கூறினார்.

Tags : Party Against Constitutional Law Baja ,Thirumaalavan Attack ,Madurai ,president ,Dol ,Lord ,Madura ,Vice President ,Thirumavalavan ,Bahia ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...