×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் 12 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இவர்களில், 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் இதுவரை தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும் நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.முத்தமிழ் செல்வக்குமார், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மனுதாரருக்கும் வழங்க வேண்டுமென்று கோரினார்.

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், வழக்கு குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு, ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு ஆகியவற்றோடு காவல்துறை தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Armstrong ,Chennai High Court ,Chennai ,Supreme Court ,Bagajan Samaj ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...