×

ஜல்லிக்கட்டில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை

கோவை, ஜன.11: ஜல்லிக்கட்டில் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பிசியோதெரபி மருத்துவ சங்கத்தினர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா வெளியிட்டுள்ள அறிக்கை: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளின் பாதுகாப்பிற்காக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி ஆய்வு, உயிர்காக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் ஆண்டு தோறும் உயிர் இழப்புகள் மற்றும் காயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மாடுபிடி வீரர்களுக்கு பிசியோதெரபி மருத்துவர்கள் பரிந்துரையோடு உயிர் காக்கும் கவசங்களான வயிற்று கவசம், நெஞ்சு கவசம், சீறுநீரக கவசம், கை, கால் பாதுகாப்பு கவசம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

இதன் மூலம் உயிர் இழப்பை தடுக்க முடியும். போட்டிக்கு முன்னர் மாடுபிடி வீரர்களின் உடற்தகுதியை பிசியோதெரபி மருத்துவரின் பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும். காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும். போட்டி நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும். மாடுபிடி வீரர்களின் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பிசியோதெரபி மருத்துவர்கள் தலைமையில் பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்ற 2009 ஆண்டு கொண்டு வரபட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்கு முறை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக நடைமுறை படுத்த முடியும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : physiotherapy doctors ,
× RELATED ஜல்லிக்கட்டில் உயிர் இழப்புகளை...