×

தங்கத்த திருட போனா… தண்ணீ வாங்க கூட தேறல… ஒரு பைசா கூட இல்ல இதுக்கு இத்தன கேமரா போங்கடா…திருடனின் விரக்தி கடிதத்தால் பொய் புகார் கொடுத்த மதபோதகர் சிக்கினார்

நெல்லை: தங்கம், வெள்ளி, பணம் என கொள்ளையடிக்க வந்த வீட்டில் ஒரு பைசா கூட இல்லாததால், சென்ற அடுத்த தடவை ஏமாற்றாம ஏதாவது வெச்சிட்டு போங்க என திருடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றதால், ரூ.25 ஆயிரம் காணாமல் போனதாக பொய் புகார் அளித்த மதபோதகர் சிக்கினார். நெல்லை அருகே பழைய பேட்டை காந்திநகர் ஐஓபி காலனியை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால் (57). மதபோதகரான இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு துணையாக ஜேம்ஸ்பால் மனைவி இருந்து வருகிறார். ஜேம்ஸ்பால், மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக அடிக்கடி மதுரை சென்று வருவது வழக்கம். கடந்த 24ம் தேதி மகள் மற்றும் மனைவியை பார்க்க சென்ற ஜேம்ஸ்பால் அன்று இரவு வீட்டின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது அது இயங்கிய நிலையில் இருந்துள்ளது.

25ம் தேதி காலை வீட்டின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது அவை செயல்படாமல் இருப்பது குறித்து பக்கத்து வீட்டிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் அங்கு சென்று பார்த்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பது குறித்து ஜேம்ஸ்பாலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கிருந்து வீடு திரும்பிய ஜேம்ஸ்பால் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த பணம் 25 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜேம்ஸ்பால் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கைவரிசை காட்ட வந்த திருடன் கைப்பட்ட எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் ‘வீட்டில் ஒரு பைசா கூட இல்லை. அடுத்த தடவை என்னை மாதிரி திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசு வை. இதற்கு ஏன் இத்தனை கேமரா, போங்கடா வெண்ணைகளா. மன்னித்துக்கொள்ளவும். இப்படிக்கு திருடன்…’ என எழுதப்பட்டிருந்தது. மதபோதகர் தனது வீட்டில் ரூ.25ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் கூறிய நிலையில் திருடனே ஒரு பைசா கூட இல்லை என கடிதம் எழுதி வைத்து சென்றதன் மூலம், மதபோதகர் போலி புகார் கொடுத்தது அம்பலமானது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தங்கம், வெள்ளி, பணம் என பல பொருட்கள் இருக்கும். அதை கொள்ளையடித்து செல்லலாம் என வந்த திருடனுக்கு தண்ணீர் வாங்க கூட ஒரு பைசா கிடைக்கவில்லை. இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற திருடன் அடுத்த தடவை ஏமாற்றாம ஏதாவது வெச்சிட்டு போங்க… என கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Nella ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...