×

அனுமதி பெறாமல் டியூட் படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல்களை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: டியூட்படத்தில் தனது இசையமைப்பில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தில் இடம்பெற்றிருந்த கருத்த மச்சான் மற்றும் பணக்காரன் படத்தில் நூறு வருஷம் ஆகிய பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதால் பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனஇளையராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, 30 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார். பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது டிரெண்டாகி வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து வாதிட்ட இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை தங்களிடம் உள்ளது. அதனால், படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். டியூட் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி, தொடர்ச்சியாக மனுதாரரின் பாடல்களை பதிப்புரிமையை மீறி பயன்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்த்து. சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளோம் என்றார். அதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே எக்கோ நிறுவனம் பயன்படுத்த இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, படம் திரையரங்கிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது வழக்கை தொடர்ந்த்து ஏன் என்று இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இது சம்பந்தமாக தயாரிப்பாளர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பிய போது, அதுபோல எந்த நபரும் இல்லை என்று நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Tags : High Court ,Ilayaraja ,Dude ,Chennai ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்