×

வனப்பகுதிகளை பாதுகாக்கும் சிறப்பு சட்டங்களை கண்டிப்புடன் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்: தமிழக தலைமை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டிடம் கட்ட லோகநாதன் என்பவர் அளித்த விண்ணப்பத்தின் மீது 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உதகமண்டலம் நகராட்சி ஆணையர் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 150 மீட்டர் தூரத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கக் கூடாது. அதனால், 17 மீட்டர் தூரத்துக்குள் வரும் பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உதகமண்டலம் நகராட்சி ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், மலைப்பகுதிகளையும் வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட விதிகளுக்கு முரணாக தனி நீதிபதி உத்தரவு உள்ளதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விதிகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால், அதிகாரிகள் கவனமுடன் விதிகளை பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும். இது சம்பந்தமான சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று மலைப்பகுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Tamil Nadu ,Chief Secretary ,Chennai ,High Court of Chennai ,Lokanathan ,Udagamandalam Municipality ,Nilgiri District ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...