ஈரோடு: ஈரோடு சோலாரில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த மண்டலத்துக்கு இதுபோன்ற செயல்களை செய்திருக்கின்றாரா? அவர் செய்தது எல்லாம் என்ன? வெறும் துரோகம்தான். பச்சை துண்டை அணிந்துகொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி பச்சை துரோகம் செய்கிறார் என்று “நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன்” என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் ஒரு துரோகி, இப்போதும் தொடர்ந்து துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லலாமே தவிர, அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகிவிடும்.
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பாஜ அரசு நிராகரித்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? பிரதமர் மோடி தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டுமா? வேண்டாமா? டெல்லியில் பல கார்களில் மாறி, மாறி சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே? தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்க பிரதமரை சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள்… நீங்கள் சொன்னால் போதும்…. தமிழ்நாடு அரசு சார்பில், நானே உங்களுக்கு காருக்கு ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல வண்டியாக ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி, இந்த மேற்கு மண்டலத்திற்கு இழைத்த பச்சை துரோக பட்டியலில், லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரயில் துரோகம். முதுகெலும்பை இழந்து, கர்சீப்பால் முகத்தை மூடிவிட்டு சுத்துகின்ற எடப்பாடி பழனிசாமியின் துரோக அரசியல்தான் அவருக்கு, ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்ற பட்டப் பெயரை பெற்றுத்தந்திருக்கிறது. மக்கள் மீதான எங்களின் உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் எங்களுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகிறது. இந்த சாதனை சரித்திரம் தொடரத்தான் போகிறது. திமுக ஆட்சிதான் மீண்டும் அமையும். இவ்வாறு பேசினார்.
* பொல்லான் மணி மண்டபம் எஸ்.கே.பரமசிவம் சிலை திறப்பு
தமிழக அரசின் பொதுப்பணி துறை சார்பில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த ஜெயராமபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை ரூ.4.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மணிமண்டபம் மற்றும் பொல்லான் உருவச்சிலையை திறந்து வைத்தார். பின்னர் மணிமண்டபம் முழுவதையும் சுற்றி பார்த்தார். இதே ேபால சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை மணி மண்டபத்திற்கு சென்ற முதல்வர் அங்கு தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னா் அங்கு அமைக்கப்பட்டு வரும் தீரன் சின்னமலையின் முழு உருவ சிலையை பார்வையிட்டார். இதே போல சித்தோடு ஆவினில் அமைக்கப்பட்டுள்ள பால்வளத்தந்தை எஸ்.கே.பரமசிவம் திருவுருவச்சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.
* தமிழ்நாட்டை பழி வாங்கும் அதிமுக, பாஜ
பாஜவுக்கு வாக்களிக்காத தமிழ்நாடு எதை கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது ஒன்றிய பாஜ அரசு. ‘‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்’’ என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதேபோல், பா.ஜ.வை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ.வும் இதே கருத்தை சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், ‘தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடக்கிறது’ என்ற ஒரே காரணத்தால்தான் கோவை, மதுரை மக்களை பா.ஜ. பழிவாங்குகிறது என ஒப்புதல் வாக்குமூலமே வழங்கியிருக்கிறார்கள்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
* ‘திமுக மூன்றெழுத்தெல்ல உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: திமுக மூன்றெழுத்தெல்ல, உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து. நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கழகப் பணி ஆற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், மேற்கு மண்டலத்துக்குள் நுழைந்தாலே, “நம் வீடு இருக்கிறது வாருங்கள்” என்று அழைத்துச் சென்று கவனித்துக் கொண்ட கழகச் சொத்துப் பாதுகாப்புக்குழு முன்னாள் உறுப்பினரான ஜெ.கே.கே.சுந்தரம் இல்லத்திற்கு நெடுநாள் கழித்து நேற்று சென்றேன். பாசத்துடன் வரவேற்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் அவரது துணைவியார் ராஜாம்மாள், அவரது மகனும் தற்போதைய சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான ஜெ.கே.கே.எஸ்.மாணிக்கம் அவரது குடும்பத்தினரும் என் மேல் பொழிந்த பாசத்தில் நனைந்து உள்ளம் நெகிழ்ந்தேன்.
அடுத்ததாக, கழக மூத்த முன்னோடியும், தனது கம்பீர உரைவீச்சால் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முத்திரை பதித்தவருமான விடுதலை விரும்பி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது நலனை விசாரித்தேன், அவரோ எஸ்ஐஆர் பணிகள் குறித்துக் கேட்டு, மக்களின் வாக்குரிமை என்ற ஜனநாயக நலன் குறித்து விசாரித்தார். முதுமையில் அனுபவங்களை அசைபோடுபவர்களுடன் அன்பாய் ஆறுதலாய் இருக்கும் நேரங்களில் மனம் இளமையாகிறது, அவர்களும் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். இவ்வாறு கூறி உள்ளார்.
