போபால்: மத்தியப் பிரதேச மருத்துவர்கள் காயமடைந்த நாகப்பாம்பை 2 மணி நேரம் ஆபரேஷன் செய்து காப்பாற்றினார்கள். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் கட்டுமானப் பணியின் போது ஜேசிபியை வைத்து பள்ளம் தோண்டிய போது அங்கு இருந்த நாகப்பாம்பு பலத்த காயம் அடைந்தது. இதில் தோல் கிழிந்து, பாம்பின் தலை நசுங்கியது. இதையடுத்து பாம்பு நண்பர்கள் ராகுல், முகில் ஆகியோர் அங்கு வரவழைக்கப்பட்டு காயமடைந்த நாகப்பாம்பைப் பாதுகாப்பாக மீட்டு, உடனடியாக உதயன் மார்க்கில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தலைமை கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகேஷ் ஜெயின் மற்றும் அவரது குழுவினர், அதிகாரிகள் ராம்கன்யா கௌரவ், ரவி ரத்தோர் மற்றும் பிரசாந்த் பரிஹார் ஆகியோர், நாகப்பாம்பின் தலை மற்றும் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதையும், தோலின் சில பகுதிகள் முழுவதுமாக உரிந்து விட்டதையும் கண்டறிந்து, பாம்புக்கு லேசான மயக்க மருந்து கொடுத்து, சிக்கலான அறுவை சிகிச்சையைத் தொடங்கியது. இரண்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை இறுதியில் நாகப்பாம்பின் உயிரைக் காப்பாற்ற 80 தையல்களை போட்டு முடித்தனர். பாம்பு இப்போது நல்ல முறையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் கண்காணிப்பிற்குப் பிறகு அது காட்டுக்குள் விடப்படும் என்று தெரிவித்தனர்.
