கோவை, நவ.26: கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.43,884 கோடி முதலீட்டில், 1 லட்சத்து 709 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே இந்த மாநாடு தொடர்பாக ‘கோவை ரைசிங்’ என்ற பாடலை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இதில் ‘காலர தூக்கு, நம்ம கோவை ரைசிங்’ எனத் துவங்கும் அந்தப் பாடலில் கோவையின் சிறப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டி.ஆர்.பி. ராஜா கூறியிருப்பதாவது, ‘‘நாங்கள் கூறியபடி கோவை எழுச்சி பெற்று வருகிறது. நாங்கள் இந்த நகரத்தை மறுசீரமைத்து வைத்து வருவதால் இனி கோவை வெறும் உற்பத்தி மையமாக மட்டும் இல்லாமல் உயர் தொழில்நுட்ப தொழில் துறை மற்றும் புதுமை மையமாக மாறி வருகிறது. இந்த மாநாடு மேம்பட்ட மின்னணுவியல், ஆட்டோ மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, ட்ரோன், சிறிய விமானங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
