தோஹா: ஃபிபா யு-17 உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் நேற்று, பிரேசில் அணியை வீழ்த்தி, போர்ச்சுகல் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கத்தாரின் தோஹா நகரில் 17 வயதுக்கு உட்பட்டோர் மோதும், ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் பிரேசில்-போர்ச்சுகல் அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் இரு தரப்பு வீரர்களும் பல முறை தவறுகள் செய்தனர்.
இரு தரப்புக்கும் தலா இரு முறை மட்டுமே கோல் போடும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், இரு அணிகளின் கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டு கோல் போடும் வாய்ப்பை தடுத்தனர். அதனால் பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் அடுத்தடுத்து கோல்களை போட்டதால் பரபரப்பு காணப்பட்டது. கடைசியில், 6-5 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரியா – இத்தாலி அணிகள் மோதின. ஆஸ்திரியா அணிக்காக நடப்பு தொடரில், 7 போட்டிகளில் 8 கோல்கள் அடித்து அசத்தியுள்ள மோசர், நேற்றைய போட்டில் 57வது நிமிடத்தில் கோலடித்து கணக்கை துவக்கி வைத்தார். கடைசியில் ஆஸ்திரியா, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. அதையடுத்து, நாளை (27ம் தேதி) நடக்கும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரியா – போர்ச்சுகல் அணிகள் மோதவுள்ளன. தவிர, 3ம் இடத்துக்கான போட்டியில், பிரேசில் – இத்தாலி அணிகள் களம் காணவுள்ளன.
