ஜஷ்பூர்: சட்டீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் பாகிச்சா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் வளாகத்திலேயே முறையான அனுமதி இன்றி விடுதி நடத்தப்பட்டு வருகின்றது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மொத்தம் 124 பேர் படிக்கும் நிலையில் அங்குள்ள விடுதியில் 22 மாணவர்கள் மற்றும் 11 மாணவிகள் மட்டுமே தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் படிப்பதற்கான அறையில், சேலையினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் சோதனை செய்ததில் அந்த அறையில் மாணவி எழுதி வைத்து இருந்த தற்கொலை கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடிதத்தில் பள்ளியின் முதல்வர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உயிரிழந்த மாணவி குற்றம்சாட்டி இருந்தார். இதனை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
