புதுடெல்லி: காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு, ராஜஸ்தானில் கடந்த 8 மாதத்தில் 11 லாக்கப் மரணங்கள் பதிவாகி இருக்கும் விவரத்தையும் விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று நடந்த விசாரணையில் நீதிபதிகள், ‘‘லாக்கப் வன்முறை மற்றும் மரணங்கள் காவல்துறை மீதான களங்கம். இதை நாடு பொறுத்துக் கொள்ளாது. லாக்கப் மரணங்கள் நிச்சயம் நடக்கக் கூடாது’’ என்றனர்.
காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்துவது தொடர்பாக இதுவரை 11 மாநில அரசுகளும், ஒன்றிய அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ உள்ளிட்ட 6 புலனாய்வு அமைப்புகளில் 3 அமைப்புகளும் இணக்க பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள மாநிலங்களும், விசாரணை அமைப்புகளும் 3 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி விசாரணையை டிசம்பர் 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
