×

கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.43,844 கோடி முதலீடு வருகிறது: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோவை: கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் ரூ.43,844 கோடி முதலீட்டில், 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில், கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், ‘டி.என். ரைசிங்’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில், ரூ.42,792 கோடி முதலீட்டில், 96,207 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் 111 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், ரூ.1,052 கோடி முதலீட்டில் 4,502 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், என மொத்தம், 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் 1,00,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தி தொழில் மேம்பாட்டிற்காக, ஆவாரம்பாளையத்தில் ரூ.14.43 கோடி மதிப்பீட்டிலும், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்காக, மூப்பேரிப்பாளையத்தில் ரூ.26.50 கோடி மதிப்பீட்டிலும், திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். அத்துடன், 9 நிறுவனங்களில், பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கி அவர் பேசியதாவது: இந்த கோவை கேபிட்டல் சிட்டி கிடையாது; டயர்-2 சிட்டிதான். ஆனால், நீங்கள் இங்கே வரும்போது பார்த்திருப்பீர்கள். எல் அண்ட் டி, எல்.எம்.டபிள்யூ., சி.ஆர்.ஐ பம்ப்ஸ், காக்னிசன்ட், பண்ணாரி அம்மன் குழுமம், ரூட்ஸ் குழுமம் என ஏராளமான நிறுவனங்களும், 60க்கும் மேற்பட்ட ஜி.சி.சி. நிறுவனங்கள், 1,702 புத்தொழில் நிறுவனங்கள், 22 இன்குபேட்டர்கள் என்று ஏராளமான நிறுவனங்களும் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இதே நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்க வேண்டும். தமிழ்நாடு வளர வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும்.

17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக இதுவரைக்கும், 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது, கடந்த ஆட்சி காலத்தின் கடைசி நான்கு ஆண்டுகளைவிட இரண்டரை மடங்கு அதிகம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கும் மேல், வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்திருக்கிறோம். திராவிட மாடல் அரசில் போடப்பட்டிருக்கிற 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நிலம் வழங்குவது – வணிக உற்பத்தி – சோதனை உற்பத்தி – கட்டுமானம் தொடங்கப்பட்டது என்று 809 திட்டங்கள், பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் இருக்கின்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12,663 என்ற வரலாற்று உயரத்தை தொட்டிருக்கிறோம்.

இத்தனை நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு காரணம் என்ன? வெளிப்படைத்தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. திறன்மிக்க படித்த இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். பிசினஸ் பிரண்ட்லி சூழல் இங்கே நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு இங்கு சரியாக இருக்கிறது. தமிழ்நாடு இப்போது அடைந்திருக்கக்கூடிய வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அப்படி, தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து இப்போது கோவையில் டி.என்.ரைசிங் மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட ‘ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ்’ தரவரிசையில், நான்கு பிரிவுகளில், தமிழ்நாட்டிற்கு சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள். எனவே, இன்றைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்கள், அடிக்கல் நாட்டி – திறப்பு விழாவுக்கு தயாராகிவிடலாம் என்று உறுதியாக சொல்ல முடியும். மற்ற முதலீட்டாளர்கள் மாநாடுகளைவிட இந்த மாநாட்டிற்கு ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அது என்னவென்றால், மொத்த முதலீடுகளில், உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்களிப்பு என்பது இந்த மாநாட்டில்தான் மிக அதிகமாக இருக்கிறது. இந்த மேற்கு பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முனைவோர் நிறுவனத்திற்கும் இதைவிட வேறு சாட்சி வேண்டுமா? இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* முதல்வர் தந்த உறுதி
‘இங்கே கூடியிருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில் முதலீடு செய்கின்ற உங்கள் திட்டங்களுக்கு, எந்தவித தாமதமும் ஏற்படாது; எந்தவித தலையீடுகளும் இருக்காது. நீங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும். உங்கள் எண்ணங்கள் செயலாகும் – உங்கள் வெற்றிகள் தொடங்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* இதுவரை நடத்தப்பட்ட 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன்மூலமாக, 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கும் மேல், வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்துள்ளோம்.
* ஸ்டார்ட்அப்-டி.என். மூலமாக இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவிக்கிறோம். அதனால், இப்போது தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 12,663 ஆக அதிகரித்து வரலாற்று உயரத்தை தொட்டிருக்கிறோம்.

* ‘முதலீடுகளை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் அவதூறு’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அரசியல் காரணங்களுக்காக தவறான டேட்டாவையும், தவறான நியூசையும் பரப்புகிறார்கள். ஆனால், உண்மையான டேட்டாவை சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 62 ஆயிரத்து 413 நிறுவனங்கள் இருந்த தமிழ்நாட்டில், இப்போது, 79 ஆயிரத்து 185 நிறுவனங்கள் இருக்கிறது. அதாவது, 16 ஆயிரத்து 772 நிறுவனங்கள் அதிகரித்திருக்கிறது. புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு பி.எப். கணக்கு தொடங்கி அதை பராமரிக்கின்றது ஒன்றிய அரசு.

அதன்படி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 29 லட்சத்து 64 ஆயிரம் பணியாளர்கள் அதிகரித்திருப்பதாக டேட்டாவை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அடுத்ததாக, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சில நிறுவனங்கள் வெளி மாநிலத்திற்கு போவதாகவும் தொடர்ந்து செய்தியை உருவாக்குகிறார்கள். ஏன் இந்த செய்திகளை பரப்புகிறார்கள் என்று யோசித்தபோதும் நமக்கு தெரிந்துவிடும். கடந்த நான்கரை ஆண்டு கால நம்முடைய ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகளை பார்த்து அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்.

Tags : Investors' ,Coimbatore ,MoU ,Chief Minister ,M.K. Stalin ,Ministry of Industry, Investment Promotion and Trade ,Tamil Nadu government… ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...