சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1660 அதிகரித்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வாரம் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. அதாவது, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கும், பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.92,160க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ.171க்கும், கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த விலைக்குறைவு ஒருநாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,720க்கும், பவுனுக்கு ரூ.1,660 உயர்ந்து ஒரு பவுன் ரூ.93,760க்கு விற்பனையானது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இதே போல நேற்று வெள்ளி விலையும் உயர்ந்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.174க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
