×

5 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பரில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நவம்பரில் 2.6பில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது. எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, நவம்பர் மாதத்தில் சீனாவுக்கு பிறகு ரஷ்யாவின் எரிபொருட்களை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அக்டோபரில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 2.5பில்லியன் யூரோக்களை இந்தியா செலவிட்டுள்ளது. நவம்பரில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 சதவீதத்தை வாங்கியது. இதனை தொடர்ந்து இந்தியா 38 சதவீதம், துருக்கி 6 சதவீதம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 6 சதவீதம் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளன.

ஒட்டுமொத்த இறக்குமதி அளவுகள் நிலையா இருந்தபோதிலும், இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு மாதந்தோறும் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தின் தடைகளுக்கு முன் ஏற்றப்பட்ட சரக்குகள் மாதம் முழுவதும் வழங்கப்படுவதால் டிசம்பரில் இந்தியாவின் கொள்முதல் மற்றொரு அதிகரிப்பை பதிவு செய்யக்கூடும். அக்டோபர் 22ம் தேதி ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா தடைவிதித்தது. இந்த தடைகள் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், எச்பிசிஎல் – மிட்டல் எனர்ஜி லிமிடெட் மற்றும் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தற்போது இறக்குமதியை நிறுத்தியுள்ளன.

எனினும் இந்தியன் ஆயின் கார்ப்பரேஷன் போன்ற பிற சுத்திகரிப்பு நிறுவனங்கள் தடை விதிக்கப்படாத பிற ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து தொடர்ந்து கொள்முதல் செய்கின்றன. தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களின் இறக்குமதிகள் ஓரளவு குறைப்பை சந்தித்தாலும் அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்கள் நவம்பர் மாதத்தில் தங்களது ரஷ்ய கச்சா எண்ணெய் அளவை மாதந்தோறும் 22 சதவீதம் அதிகரித்தன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : New Delhi ,India ,China ,Energy and Clean Air Research Center ,
× RELATED தங்கம் விலை மாற்றமில்லை; வெள்ளி கிராமுக்கு ரூ.6 குறைந்தது