×

களக்காடு பகுதியில் தொடர் மழை: தலையணையில் குளிக்க 6வது நாளாக தடை

களக்காடு: களக்காடு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து களக்காடு தலையணையில் குளிக்க 6வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கும் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. களக்காடு பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை தீவிரமடைந்து வருகிறது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு காட்டாறு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் தலையணையில் குளிக்க கடந்த 20ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

தொடர் மழை பெய்து வருவதால் இன்று 7வது நாளாக தடை நீடிக்கப்பட்டது. அதே நேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையினால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து வனப்பகுதியில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் கடந்த 20ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. இன்று 4வது நாளாக தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. களக்காட்டில் ஓடும் ஆறு, கால்வாய்களிலும் தொடர் மழையினால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் குளங்களும் நிரம்பி வருகிறது. களக்காடு பகுதியில் இன்று காலை நிலவரப்படி 6.80 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

Tags : Kalakkadu ,Thirumalainambi ,temple ,Thirukurungudi ,Nellai district ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு