“பெற்ற தாயைக் கொன்ற மகன்” என்றும் “சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரை வீட்டைவிட்டுத் துரத்திய பிள்ளைகள்” என்றும் நாளிதழ்களில் படிக்கிறோம்.
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதே இதற்கான முதல் காரணம்.
இஸ்லாமியப் பேரறிஞர் ஷேக் முஹம்மது காரக்குன்னு அவர்கள், ‘குழந்தைகளை வளர்க்கும்போது.” என்னும் நூலில் இது குறித்து முழுமையாக ஆய்வு செய்துள்ளார்கள். அந்த நூலில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார்:
இருவகையான பிள்ளைகளைக் குர்ஆன் அறிமுகப்படுத்துகிறது.
“தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை அவனைச் சிரமத்துடனேயே கருவுற்றுச் சுமந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்குப் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.
இறுதியில் அவன் தன் முழு பலத்தை அடைந்து அவனுக்கு நாற்பது வயது ஆகும்போது கூறுவான்: ‘என் அதிபதியே, நீ என் மீதும் என் தாய் தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக (உனக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் உன் உவப்பைப் பெறும் வகையில் நற்செயலைச் செய்வதற்காகவும் எனக்கு நற்பேற்றினை அளிப்பாயாக. என் பிள்ளைளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக. மேலும் நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன். மேலும் கீழ்ப்படிந்து வாழும் அடியார்களில் சேர்ந்தவனாகவும் இருக்கிறேன்.’
“இத்தகைய மனிதர்களிடமிருந்து அவர்களின் நல்ல செயல்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் அவர்களின் தீமைகளை நாம் பொறுத்துக் கொள்கிறோம். அவர்களிடம் அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியின்படி அவர்கள் சுவனவாசிகளுடன் சேர்ந்து இருப்பார்கள்.
“ஒருவன் தன் தாய் தந்தையரிடம் இவ்வாறு கூறுகிறான்: ‘சீ! என்னை நீங்கள் கஷ்டப்படுத்தி விட்டீர்கள். நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் ஏராளமான தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே… அவர்களில் எவரும் எழுந்து வரவில்லையே’- (குர்ஆன் 46:15-17)
படைத்த இறைவனுக்கும் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும் நன்றி செலுத்தும் பிள்ளைகள் ஒரு வகை.
‘கடவுளாவது…மறுமையாவது…’ என்று எடுத்தெறிந்து பேசி பெற்றோர் மனத்தை நோகடித்துத் தாய் தந்தையருக்கு சாபமாக விளங்கும் பிள்ளைகள் இன்னொரு வகை.
நல்லொழுக்கமுள்ள குழந்தைகள் தாய் தந்தையர்க்கு ஈருலகிலும் அருட்கொடையாகவே திகழ்வார்கள். அவர்கள் இந்த உலகில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறார்கள். கண்ணியத்தையும் மதிப்பையும் அளிக்கிறார்கள். வாழ்க்கையின் அலங்காரமாகவும் மிளிர்கிறார்கள்.
பிள்ளைகள் நல்லியல்பும் நல்லொழுக்கமும் உள்ளவர்களாய் இருப்பது கண்டு தாய் தந்தையர் எப்போதும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். எந்த ஒரு வீட்டிற்கும் அவர்கள் அலங்காரமாய்த் திகழ்வார்கள். அவர்கள் எப்போதும் தம் தாய் தந்தையர்க்கு மன அமைதியை அளிப்பார்கள். அவர்களின் கண்களைக் குளிரச் செய்வார்கள்.
அதனால்தான் குழந்தைகளைச் சிறந்த பண்பு நலன்கள் கொண்டவர்களாய் ஆக்குவதற்குப் பிரார்த்திக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
– சிராஜுல் ஹஸன்
