×

தேவதானப்பட்டி பகுதியில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

*குழித்தட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் கரும்பு சாகுபடியில் குழித்தட்டு நாற்றுகள் முறையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி கடந்த 25 ஆண்டுகளில் பெருமளவில் குறைந்து வந்தது.

மற்ற சாகுபடி பயிர்களும் நோய் தாக்குதல், விலை குறைவு, அதிக வேலைப்பாடு, பூச்சிமருந்துகள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் குறைந்து வருகிறது. இந்நிலையில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் கரும்பு சாகுபடியினை அதிகரிக்க வேளாண்மைத்துறையினர் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகம் பல உத்திகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக கரும்பு நடவு என்றால் கரும்பு கர்னையை கொண்டு நடவு செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது குழித்தட்டு நாற்றுகள் முறையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குழித்தட்டு முறைகள் என்பது கரும்பில் உள்ள பருக்களை வெட்டி எடுத்து குழித்தட்டு முறையில் பதியம் போட்டு நிழல்வலைக்கூடம் அமைத்து ஒரு மாதம் ஆன வளர்ந்த நாற்றுகளை எடுத்து விளைநிலத்தில் நேரடியாக நடவு செய்யலாம்.

குழித்தட்டு நடவு முறை என்பது நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பமாகும். தற்போது வைகைஅணை அருகே வரதராஜ்நகரில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகம் இந்த குழித்தட்டு நாற்றுகள் தயார் செய்து மாவட்டம் மற்றும் மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது. இதனால் அதிக செலவினங்கள் குறையும், காலவிரயம் குறையும் என்பதால் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த முறை சாகுபடியில் அகலப்பாத்தி முறையில் 4.5 அடி அகல இடைவெளியில் பார் அமைத்து பயிருக்கு பயிர் 2அடி இடைவெளியில் கரும்பு நாற்றுகள் மூலம் நடவு செய்யப்படுகிறது. சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு அரசு எக்டர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்து 625 மானியமாக வழங்குகிறது.

தேனி கோட்ட பகுதியில் தாடிச்சோரி மற்றும் பூதிப்புரம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளின் விளைநிலங்களில் குழித்தட்டு நாற்றுகள் நிழல்வலைக்கூடம் அமைத்து நாற்றுகள் தயார் செய்து கொடுக்கின்றனர்.

இந்த முறையை சர்க்கரை ஆலை பொதுமேலாளர் ஞானசேகரன், கரும்புத்துறை மேலாளர் தேவநாதன், கரும்பு விரிவாக்கத்துறை மேலாளர் பழனிவேல் ஆகியோர் விவசாயிகளின் விளைநிலங்களில் தொடங்கி வைத்தனர்.

Tags : Devadhanapatti ,Theni district ,
× RELATED ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய...