×

பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் கயிறு கட்டி கடந்து செல்லும் கிராம மக்கள்

அரூர் : தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிராம மக்கள் கயிறு மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் சூழல் நிலை ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

சித்தேரி, கலசப்பாடி, அரசநத்தம் மற்றும் சுற்றியுள்ள மலை கிராமங்களில் பரவலாக கனமழை பெய்ததால், நேற்று காலை கலசப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் வேலைக்கும், மாணவ, மாணவிகள் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை.

கூலித்தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கியதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காலங்களில், ஆற்றைக் கடக்க உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு செல்லும் மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த சாலை, வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிராம மக்கள், தற்காலிகமாக ஏணியை போல் மரக்கொம்புகளை பயன்படுத்தியும், கயிறு கட்டியும், ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை நீடிப்பதால், பாலம் கட்டுமான பணியை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Arur ,Arasanatham ,Kalasappadi ,Dharmapuri ,Dharmapuri district ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!