சென்னை : சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நவ.29ம் தேதி மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், ” குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல்- தெற்கு இலங்கை அருகில் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை..
25-11-2025 மற்றும் 26-11-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
“இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
