×

பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை அருகே பிறந்த பச்சிளம் பெண் குழந்தை கால்வாயில் வீசி கொலை

*வேலூரில் பரபரப்பு

வேலூர் : பிறந்த பச்சிளம் பெண் குழந்தை, வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை அருகே உள்ள கால்வாயில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை சாலையில் நேற்று காலை பொதுமக்கள் சிலர் சென்றனர்.

அப்போது அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பெண் சிசு ஒன்று இறந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தது. இதைக்கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு கால்வாயில் வீசப்பட்டிருந்த பெண் சிசு உடலை மீட்டனர். விசாரணையில் குழந்தை நேற்று தான் பிறந்திருக்கும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்த குழந்தை அரசு, அல்லது தனியார் மருத்துவமனையில் பிறந்ததா? அல்லது வேறு எங்காவது பிறந்த குழந்தையை கால்வாயில் வீசினார்களா? கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த சம்பவம் நடந்ததா? பெண் குழந்தை என்பதால் கால்வாயில் வீசி இந்த கொடூர கொலையில் ஈடுபட்டார்களா? இதை வீசி சென்றவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்குள்ள சிசிடிவி கேமராவில் குழந்தையை வீசி சென்றவர்களின் உருவம் பதிவாகியுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் போலீசார், குழந்தையை வீசி கொன்ற கல்நெஞ்சம் படைத்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி (பொறுப்பு) திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் காண்டீபன் ஆகியோரும் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Tags : Bentlent Government Hospital ,Vellore Vellore ,Vellore Pendlent Government Hospital ,Government of Vellore Pentland ,
× RELATED சேலம் அதிமுக பிரமுகரின் மகள் கொலையில்...