×

நெமிலி அடுத்த உளியநல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு

ராணிப்பேட்டை : நெமிலி அடுத்த உளியநல்லூர் ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு டிஆர்ஓ தனலிங்கம் தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திட்ட இயக்குநர் சரண்யாதேவி, தனித்துணை ஆட்சியர் கீதாலட்சுமி, நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடையநம்பி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த ராமகுமார் ஆகியோரும் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.இக்கூட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ஆறுமுகம் அளித்த மனுவில், `இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய 169 பேர் டிசிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்தோம்.

பல ஊர்களை சேர்ந்தவர்கள் எங்களுடன் பணியாற்றி வந்தனர். 1998 பிப்ரவரி 24ம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி டிசிசி நிறுவனம் மூடப்பட்டது. ஆனால், கடந்த 27 ஆண்டுகளாக டிசிசி நிறுவனம் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் தராததை கண்டித்தும் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த தவறிய லிக்குலேட்டர் அலுவலகத்தை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடத்த தொழிலாளர்கள் குடும்பத்தின் சார்பாக தெரிவிக்கிறோம். இதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

நெமிலி ஒன்றியம், உளியநல்லூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:உளியநல்லூர் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக சொர்ணவாரி நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து, 5 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திரவாடி, கீழ்வீதி, சிறுவளையம் ஆகிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முயன்றோம்.

அங்குள்ள பட்டியல் எழுத்தர்கள், எங்களது கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா, அடங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய மறுக்கிறார்கள் மற்றும் நெல்லையும் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். எங்களது கிராமத்தில் கடந்த சொர்ணவாரி பருவத்தில் மட்டும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 30,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்துள்ளது.

எனவே, பருவ மழைக்காலம் என்பதால் அரசு கொள்முதல் செய்யும் நெல்லை சேமித்து வைக்க கிடங்கு வசதி உள்ள எங்களது உளியநல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டியக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சி தீனன் அளித்த மனுவில், `ராணிப்பேட்டை மாவட்டம், சக்கரமல்லூர் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க சிடிஓ அனுமதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் கோப்பு நிலுவையில் உள்ளது.

அரசுக்கு மணல் குவாரி மூலம் வருவாய் கிடைத்திடவும், தரமான கட்டுமானத்திற்கு ஆற்று மணல் கிடைத்திடவும் கடந்த 20 மாதங்களாக ஆற்று மணல் இல்லாது லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதை மேம்படுத்திடவும் சக்கரமல்லூர் மணல் குவாரிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க கோரியும் வரும் டிசம்பர் 8ம் தேதி அன்று முதல் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் 100 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 353 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Tags : Uliyanallur panchayat ,Nemili ,Ranipet ,Uliyanallur ,Ranipet Collectorate ,
× RELATED நெல்லையில் டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்!!