நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருவதால் தாமிரபரணியில் சுமார் 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 3 மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடல், அரபிக்கடலில் 3 வளிமண்டல சுழற்சிகள் உருவாகியுள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் தற்போது நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். இதனால் இன்று (25ம் தேதி) முதல் குமரிக்கடல் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்.
இதன் நகர்வை பொறுத்து தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து உள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டம் காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக 20 செமீ மழை பதிவாகி வருகிறது. மழைப்பொழிவைப் பொறுத்தவரை நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 94.80 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 80.40 மி.மீ., பாபநாசம் பகுதியில் 760 மி.மீ., சேரன்மகாதேவியில் 64 மி.மீ., மணிமுத்தாறில் 66.80 மி.மீ., நாங்குநேரியில் 65 மி.மீ., மழை பதிவாகியது. சேர்வலாறு அணைப்பகுதியில் 72 மி.மீ., நெல்லை மாநகரில் 46.40 மி.மீ, பாளையங்கோட்டையில் 54 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 232 மி.மீ., நாலுமுக்கு 220 மி.மீ., காக்காச்சி 210 மி.மி., மாஞ்சோலை 190 மி.மீ மிக கனமழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 94 மி.மீ., கடம்பூரில் 93 மி.மீ., திருச்செந்தூரில் 86.30 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 82 மி.மீ., கழுகுமலையில் 78 மி.மீ., தூத்துக்குடி மாநகரில் 66 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கீழரசடி, வைப்பாறு, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் 61 முதல் 66 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது. மருதூர் அணைக்கட்டின் நீர்மட்டம் 11.4 அடியாக உயர்ந்துள்ளது, அணையில் இருந்து விநாடிக்கு 22,543 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், வைகுண்டம் அணையின் நீர்மட்டம் 10.8 அடியை எட்டியுள்ளது. 14 மதகுகள் வழியாக விநாடிக்கு 19,747 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த கனமழையால், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு குடிசை வீடுகள் மற்றும் ஒரு சிமென்ட் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்ததை பொறுத்தவரை கடனா அணைப் பகுதியில் 96 மி.மீ., சிவகிரியில் 67 மி.மீ., ஆய்க்குடியில் 66 மி.மீ., பதிவாகி உள்ளது. கனமழையில் தென்காசி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்தது. தொடர் கனமழையால் ராமநதி, கடனாநதி அணைகள் நிரம்பியுள்ள நிலையில் சேர்வலாறு, மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 103.05 அடியை கடந்துள்ளது. 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 129 அடியை கடந்தது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 149 அடியை கடந்துள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 2800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மணிமுத்தாறு பிரதான கால்வாயில் 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
கனமழை காரணமாக அணைகளின் உபரி நீர் மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் தாமிரபரணியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. நேற்றைய நிலவரப்படி 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டதாக நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மற்றும் நெல்லையில் சிறப்பு பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டு முகாமிட்டுள்ளன. அனைத்து முக்கிய அணைகள், பாலங்கள், அருவிகளுக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதிக வெள்ள அபாயம் இருப்பதால் அதிகாரிகள் 3 மாவட்டங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி எம்பி ஆய்வு
நேற்று மாலை ஏரல் ஆற்றுப்பாலப்பகுதிக்கு வருகை தந்த கனிமொழி எம்பி, உயர்மட்ட பாலம் மற்றும் தண்ணீரில் மூழ்கியுள்ள பழைய தாம்போதி பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திரண்டிருந்த பொதுமக்கள், ஆற்றுப்பாலத்திற்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்கு பாலத்தின் அருகில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அவர், அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது சண்முகையா எம்எல்ஏ, மேயர் ஜெகன்பெரியசாமி, கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா ஆகியோர் உடனிருந்தனர்.ஆய்வில் வை. கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூர் செயலாளர் ராயப்பன், ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துமாரி, ஜவ்பர்சாதிக், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மணிவண்ணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முத்துமாலை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய பொருளாளர் பத்ரகாளிமுத்து, துணை செயலாளர் சண்முகராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜவேல், நகர இளைஞரணி முகமதுபக்மி, வார்டு செயலாளர் செந்தில் ஆறுமுகம், தொண்டரணி கார்த்தீசன், வட்டார காங். தலைவர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளங்கள் நிரம்பின
நெல்லை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 440 குளங்களில் 76 குளங்கள் நிரம்பி வழிகின்றன. 101 குளங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் நிரம்பி உள்ளது. அதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 91 குளங்களில் 5 குளங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் நிரம்பி உள்ளது.
படகுகள் கரை நிறுத்தம்
தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதேபோன்று நாட்டுப்படகு மீனவர்களும் பெரும்பாலும் கடலுக்கு செல்லவில்லை
குளமான ரயில் நிலையம்
கனமழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. தண்டவாளத்தை தண்ணீர் சூழ்ந்திருந்ததால் மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்த பயணிகள் ரயில், மீளவிட்டானுடன் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் மீண்டும் 8.30 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்பட்டு சென்றது. அதே நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் தேங்கியிருந்த மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டது. இதனால் மற்ற ரயில்கள் வழக்கம்போல் கீழுர் ரயில் நிலையத்தை வந்தடைந்தன. மேலும் காலை 10 மணிக்கு வர வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ், சுமார் 3.30 மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி வந்தடைந்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை: குறைதீர்கூட்டம் ரத்து
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார். அதுபோல தொடர் மழை காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
குடியிருப்புகளை சூழ்ந்தது
தூத்துக்குடி மாநகரில் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முத்தம்மாள் காலனி, தபால் தந்தி காலனி, குறிஞ்சிநகர், கோக்கூர், கதிர்வேல்நகர், நேதாஜிநகர், ராஜீவ்நகர், சிவஜோதிநகர், ஆதிபராசக்திநகர், மச்சாதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சூழந்து தெருக்களில் குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு பகுதி, மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது.
உப்பாற்று ஓடையில் வெள்ளம்
கனமழையால் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள ஆதிநாதபுரம், கரையடியூர், மளவராயநத்தம் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதையடுத்து கோரம்பள்ளம் குளத்தில் இருந்து 7 மதகுகள் திறக்கப்பட்டு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் முத்தையாபுரம், அத்திமரப்பட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். அத்திமரப்பட்டி, காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மழையில் சாய்ந்த மின்கம்பங்கள் முக்கூடல் அருகே சடையப்ப
புரம் பகுதியில், தொடர் மழையின் காரணமாக பெரிய மரம் வேரோடு சாய்ந்து தாழ்வழுத்த மின்பாதையின் மீது விழுந்தது. விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், மின்வாரிய ஊழியர்கள் மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றி, அறுந்த மின் ஒயர்களைச் சரிசெய்து பாதுகாப்பான முறையில் மீண்டும் மின் விநியோகம் வழங்கினர். அதேபோல, நேற்று காலை 10 மணியளவில் 11 கிலோவாட் நெல்கட்டும்செவல் மின்பாதையில் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்தன. உடனடியாகச் செயல்பட்ட அதிகாரிகள், சுப்பையாபுரம் அருகே மின் கம்பத்தில் இணைப்பைப் பிரித்து பழுதான பகுதியைத் தனிமைப்படுத்தினர். பொதுமக்களுக்கு மின் விநியோகம் பாதிக்காத வகையில், மாற்று ஏற்பாடாக 11 கிலோவாட் ராயகிரி மின்பாதை வழியாக காலை 10:35 மணிக்கே மின்சாரம் வழங்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களின் பணிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
கனமழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:கனமழை காரணமாக ஆறு, குளம் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நீர்நிலைகளின் அருகே செல்வதையோ, குளிப்பதையோ அல்லது வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றின்போது, மரங்களின் அடியிலோ அல்லது பழுதடைந்த, உறுதியற்ற கட்டிடங்களின் அருகிலோ தஞ்சம் புகுவதைத் தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் மற்றும் அறுந்து விழுந்த மின்கம்பிகள் அருகே செல்வதைத் தவிர்க்கவும். மின்சாரம் தடைபடும் பட்சத்தில், மின்கம்பங்களையோ, கம்பிகளையோ தொட வேண்டாம். இது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மிக அபாயகரமானதாகும்.ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், குடிநீர், முக்கிய ஆவணங்கள், டார்ச் லைட், மெழுகுவர்த்தி மற்றும் முதலுதவிப் பெட்டி போன்றவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
தாமிரபரணியில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும்: கலெக்டர் சுகுமார் எச்சரிக்கை
நெல்லை, நவ. 25: நெல்லை மாவட்டத்தில் மழை அளவை பொறுத்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் சுகுமார் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து சுமார் 12 ஆயிரம் கன அடி மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து சுமார் 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெய்யக்கூடிய மழையின் அளவை பொறுத்து ஆற்றில் திறந்து விடப்படும் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும், நீரின் வேகம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொது மக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றில் இறக்க வேண்டாம் எனவும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
