கோபி,நவ.25: பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சி குறித்த பரப்புரை தொடர் பயணம் கோபியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தந்தை பெரியாரின் 150வது ஆண்டுவிழா இன்னும் 3 ஆண்டுகளில் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று பெரியார் உலகம் பணிகள் முடிந்து, திறப்புவிழா நடைபெறும். பெரியார் உலகம் வெறும் கட்டிடம் இல்லை. ஒரு நல்லாட்சி அமைந்து அனைவருக்கும் அனைத்தும் என்று வந்தால் அது தான் பெரியார் காண விரும்பிய உலகம்.சாதி,பேதமற்ற உலகம், மூட நம்பிக்கை அற்ற உலகம் போன்றவையே அவர் காண விரும்பிய உலகம்.ஒடுக்கப்பட்ட இந்த சமுதாயத்தை நிமிர்ந்து நிற்கும் வகையில் மாற்றியது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.சென்னியப்பன்,ராஜமாணிக்கம், சிவலிங்கம்,யோகானந்தம், ஈரோடு சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில துணை பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம்,திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன்,மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு அணி மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சண்முகம்,கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, காமராஜ் கல்வி நிறுவன தலைவர் ஜவஹர், திராவிடர் கழக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் அஜித்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

