கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா பகுதியில் வசிப்பவர் பாலன்(70). இவரது மனைவி நாகியம்மா (65), அருகில் உள்ளவர்களுடன் நேற்று காலை ஆடுகளை அப்பகுதியில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது, புதர் பகுதியில் பதுங்கியிருந்த புலி நாகியம்மா மீது பாய்ந்து அவரை கடித்து இழுத்து சென்றது. இதை பார்த்து மற்றவர்கள் பயந்து சத்தம் போட்டனர். புலி வேகமாக நாகியம்மாவை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது.தகவலறிந்து வனத்துறையினர் வந்து நாகியம்மாவை தேடினர். வனப்பகுதியை ஒட்டி உள்ள மூங்கில் புதருக்குள் நாகியம்மா உடல் கிடந்தது.
புலி கழுத்தை கடித்து இழுத்து சென்றதில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதையடுத்து பொதுமக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
