×

ஓட்டுரிமை அவரவர் சொந்த மாநிலத்தில் தான் ஓட்டுகளை திருட நினைத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்: பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை

 

கோவை: ஓட்டுரிமை என்பது அவரவர் சொந்த மாநிலத்தில் தான், மக்களின் ஓட்டுக்களை திருட நினைத்தால் புரட்சி வெடிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவை ஹோப்காலேஜ் பகுதியில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள். இங்குள்ள ஒவ்வொரு ஆண்களும் கேப்டன் தான், பெண்கள் ஒவ்வொருவரும் லேடி கேப்டன் தான். கேப்டன் ஒரு புறம், லேடி கேப்டன் ஒரு புறம் இருக்கும் வரை இந்த கட்சியை யாராலும் தொட முடியாது.

2026 இல் தேமுதிக மிகப்பெரிய வெற்றியை பெறும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். என்ற பூகம்பம் கிளம்பியுள்ளது. வட நாடுகளில் இருந்து பல பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இங்கு ஓட்டுரிமை கொடுத்து, தமிழர்களாக மாற்ற முயற்சி நடக்கிறது. ஓட்டுரிமை என்பது அவரவர் சொந்த மாநிலத்தில்தான் இருக்க வேண்டும். மக்களின் ஓட்டுகளை திருட வேண்டும் என்று நினைத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஜனவரி 9 ம் தேதி நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தமிழ்நாடு மற்றும் மக்களின் நலன் கருதிதான் கூட்டணி அமையும். 2026ல் நடைபெறும் தேர்தல் இதுவரை தமிழக அரசியலில் பார்க்காத புதுவித தேர்தலாக அமையும்’’ என்றார்.

Tags : Premalatha Vijayakanth ,Govai ,Demutika Polling Agents ,Govai Hopcollege ,
× RELATED விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள்...