×

9வது சீக்கிய குரு ஸ்ரீகுரு தேக் பகதூர் தியாக 350வது ஆண்டு விழா; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்: தமிழக அமைச்சர், எம்பி நேரில் வழங்கினர்

 

சென்னை: பஞ்சாப் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எஸ்.ஹர்பஜன் சிங் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பிரேந்தர் குமார் கோயல் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் கடந்த மாதம் 17ம்தேதி சந்தித்து பேசினர். அப்போது, பஞ்சாப் மாநில அரசின் சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள 9வது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350வது ஆண்டு விழாவிற்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோரை அந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில், நேற்று ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடந்த 9வது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350வது ஆண்டு விழாவில் அவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் மற்றும் நினைவுப் பரிசினை பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானிடம் வழங்கினர். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: குரு தேக் பகதூர் ஜியின் 350வது தியாகிகள் தின நினைவேந்தல் விழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அளித்த அழைப்பிற்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முக்கியமான நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோரை என் சார்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்தினேன்.

அவர்களை அன்புடன் வரவேற்க முன்வந்த தங்கள் நல்லெண்ணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உங்களிடம் வழங்குவதற்கு, அவர்களிடம் அளித்துள்ள நினைவுப் பரிசை அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். மேலும் விழா மிகச் சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, குரு தேக் பகதூர் நிலைநாட்டிய துணிச்சல், கருணை மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய உன்னத லட்சியங்களுக்கு தனது மரியாதையையும் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Sikh ,Guru ,Sriguru ,Bagathur Dema ,Chief Minister of ,Punjab ,Bhagwant Manku ,Ph. K. Stalin ,Minister of ,Tamil Nadu ,Chennai ,State ,Minister of Public Works ,S.S. Harbhajan Singh ,Water Sector ,Minister ,Brendar Kumar Goyal ,MLA ,K. Stalin ,state government of Punjab ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...