×

சுயமரியாதை, உரிமையை அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா? பச்சைத்துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

 

சென்னை: பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல் நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் அறிவித்தது. அதன்படி, நேற்று திருவாரூரில் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் திருவாரூரில் திமுக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்க துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?.

நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, “சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?” என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் எங்களுக்கு துணை நிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என பழனிசாமி காத்திருக்கிறார்.

கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும் தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா?. 3 வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது தலையை சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளை கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?. உழவர்கள் நலன் காக்க தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Mu. K. Stalin ,Chennai ,Eadapadi Palanisami ,K. Stalin ,Thanjavur ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...