×

சிந்து பகுதி நாளையே இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு

புதுடெல்லி: எல்லையில் மாற்றம் வரலாம். சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ள கருத்து பாகிஸ்தானுக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பாஜவினர் கூறி வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கும்பல் மீது இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. மறுபுறம் இந்தியா-பாகிஸ்தான் இடையே முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது அது ரத்து செய்யப்பட்டிருப்பதால் பாகிஸ்தானுக்கு அதிக இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் ராஜ்நாத் சிங் அடுத்த அறிவிப்பை வெளியிட்டு பாகிஸ்தானுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பல ஆண்டுகளாக நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். எப்படியோ சிலர் தப்பித்து, இந்தியாவுக்கு வந்து விட்டனர். குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். அண்டை நாடுகளில் இருந்து வரும் ஒரு சிறப்பு வகுப்பினருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது. உண்மையிலேயே அதற்கு தகுதியான இந்து சமூக மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. அவர்களின் துன்பங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் அந்த வலியை புரிந்து கொண்டவர் பிரதமர் மோடி தான்.

அதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. சிந்து பகுதியை சேர்ந்த இந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையை சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என அத்வானி குறிப்பிட்டுள்ளார். சிந்துவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் சிந்து நதியை புனிதமாக கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம். யாருக்கு தெரியும், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Sindh ,India ,Rajnath Singh ,New Delhi ,Minister ,Pakistan ,BJP ,Jammu and Kashmir ,Pahalgam ,
× RELATED வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3...