டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நேற்று முன்தினம் (22-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (23-11-2025) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (24.11.2025 தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
