சென்னை: இந்திய ரயில்வே, 100 கோடி டன் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து, தொடர்ந்து வலுவாக செயல்பட்டு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 19 வரை மொத்தம் 102 கோடி டன் (1,020 மில்லியன் டன்) சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
நிலக்கரி – 50.5 கோடி டன் (முதல் இடம்)
இரும்பு தாது – 11.5 கோடி டன்
சிமென்ட் – 9.2 கோடி டன்
கண்டெய்னர் சரக்கு – 5.9 கோடி டன்
இரும்பு மற்றும் எக்கு – 4.7 கோடி டன்
உரங்கள் – 4.2 கோடி டன்
பெட்ரோலிய பொருட்கள் – 3.2 கோடி டன்
உணவு தானியங்கள் – 3 கோடி டன்
எக்கு தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள் – 2 கோடி டன்
மற்ற சரக்குகள் – 7.4 கோடி டன்
ரயல்வேயில் தினமும் சுமார் 44 லட்சம் டன் சரக்குகள் ஏற்றப்படுகின்றன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 42 லட்சம் டன் மட்டுமே ஏற்றப்பட்டது. இது செயல்திறன் மேம்பட்டுள்ளதை காட்டுகிறது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 93.51 கோடி டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 90.69 கோடி டன் மட்டுமே ஏற்றப்பட்டது.
இது நல்ல வளர்ச்சியை காட்டுகிறது. இந்தியாவின் கட்டுமான வளர்ச்சிக்கு சிமென்ட் மிக முக்கியம் என்பதால், ரயில்வே இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மொத்த சிமென்ட் கொண்டு செல்வதற்கான புதிய கொள்கையும், கட்டணங்களில் குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் போக்குவரத்து நேரம் குறையும், செலவு குறையும், தொழில்துறைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயன் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவின் நெட் ஜீரோ கார்பன் இலக்கை நோக்கி இது ஒரு முக்கிய படியாகும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
