×

ஒன்றிய அரசு அமல்படுத்திய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து ஸ்டிரைக்: வரும் 26ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படும் 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசு அமல்படுத்திய 4 புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து, நாடு தழுவிய போராட்டம் வரும் 26ம் தேதி நடத்தப்படும் என 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. தொழிலாளர் சட்டத்தில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனாலும், கடும் எதிர்ப்பை மீறி 4 புதிய தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய அரசு கடந்த 21ம் தேதி அமல்படுத்தியது. இதில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்கள், ஊதிய குறியீடு (2019), தொழில்துறை குறியீடு (2020), சமூக பாதுகாப்பு குறியீடு (2020) மற்றும் தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி சூழல் குறியீடு (2020) என 4 சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சட்டங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகவும் விரிவான, முற்போக்கான தொழிலாளர் நலன் சார்ந்த சீர்த்திருத்தம் என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். 4 புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான விரிவான விதிகள், திட்டங்களை வகுப்பதற்கான பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியிருக்கிறது.

இந்த சட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதகமாகவும் தொழிற்சங்கங்களை நீர்த்துப் போகச் செய்யவும் கூடிய பல அம்சங்களும், முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களும் இடம் பெற்றிருப்பதாக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், 4 புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ம் தேதி (நாளை மறுதினம்) நாடு தழுவிய போராட்டத்திற்கு 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக, ஐஎன்டியுசி, ஏஐசிடி யுசி, எச்எம்எஸ், சிஐடியு, தொமுச உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான 4 புதிய தொழிலாளர் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக அமல்படுத்தியதற்கு எதிராக நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்த 4 சட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி, நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செய்த ஏமாற்று மோசடி. இந்த தன்னிச்சையான மற்றும் ஜனநாயக விரோத அறிவிப்பு, அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறுகிறது. தொழிலாளர் நலன்களை முற்றிலும் சிதைத்துள்ளது.

இந்த சட்டங்களை தொடக்க நிலையில் இருந்தே தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நல கூட்டமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2019 மற்றும் 2020ல் 4 புதிய சட்டங்கள் இயற்றப்பட்ட உடனேயே வேலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கிடைத்ததும், ஒன்றிய பாஜ அரசு 4 புதிய தொழிலாளர் சட்டங்களைச் செயல்படுத்த அதிகாரம் கிடைத்து விட்டதாக நினைத்து இவற்றை அமல்படுத்தி உள்ளது.

இவை உழைக்கும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. இதை தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்களாகவே கருதுகிறோம். புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் உரிமைகளையும் பறிக்கிறது. இந்த விதிகள் செயல்படுத்தப்பட்டால், எதிர்கால தலைமுறையினரின் நம்பிக்கைகள், உரிமைகளை பறிக்கும்.

எனவே இந்த புதிய 4 சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டங்களை எதிர்க்கும் வகையில், வரும் 26ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும், தொழிற்சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் இப்போதிருந்தே பணியிடங்களில் கருப்பு பேட்ஜ்களை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். திங்கட்கிழமை (இன்று) முதல் வாயில் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் போன்றவை போர்க்கால அடிப்படையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

அதிகரித்து வரும் வேலையின்மை நெருக்கடி, பணவீக்கம் போன்றவற்றுக்கு மத்தியில் 4 புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருப்பது, உழைக்கும் மக்கள் மீதான போரை அறிவிப்பதற்குக் குறைவானதல்ல என்ற வலுவான செய்தியை அனுப்புகிறோம். ஒன்றிய அரசு அதன் முதலாளித்துவ கூட்டாளிகளுடன் இணைந்து நாட்டை மீண்டும் எஜமானர்-ஊழியர் உறவின் சுரண்டல் சகாப்தத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது.

4 புதிய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை உழைக்கும் மக்கள் வலிமையான போராட்டத்தை நடத்துவார்கள் என்ற கடுமையான எச்சரிக்கையை ஒன்றிய அரசுக்கு விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக ரயில், பொது போக்குவரத்து, வங்கிகள், அஞ்சல், காப்பீடு சேவைகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த போராட்டம் குறித்து தொமுச தலைவர் சண்முகம் கூறியதாவது:

தொழிலாளர் சட்டங்களை, நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்தும், அச்சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்திலும் இந்த போராட்டம் நடைபெறும். என்ன மாதிரியான போராட்டங்களை நடத்துவது என்பது குறித்து மற்ற தொழிற்சங்களுடன் ஆலோசனை நடத்தி அதன் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். ஒன்றிய அரசை கண்டித்து ஒன்றிய அரசின் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* 2019 மற்றும் 2020ல் 4 புதிய சட்டங்கள் இயற்றப்பட்ட உடனேயே வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டன.

* பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கிடைத்ததும், ஒன்றிய பாஜ அரசு இவற்றை அமல்படுத்தி உள்ளது.

* புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் உரிமைகளையும் பறிக்கிறது.

* இது தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்.

* இந்த விதிகள் எதிர்கால தலைமுறையினரின் நம்பிக்கைகள், உரிமைகளை பறிக்கும்.

Tags : Union Government ,New Delhi ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு...