×

அறநிலைய துறைக்கு சொந்தமான கோயில் குளம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்

புழல்: புழலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான குளம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புழல், சிவராஜ் 3வது தெருவில்  கரியமாணிக்க பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிலையில், குளம் மட்டும் சுமார் 10 கிரவுண்ட் பரப்பளவில் உள்ளது. சிலர், லாரிகள் மூலம் மண்ணை கொட்டி குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்த, தகவலறிந்த புழல் பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு, லாரிகள் மூலம் மண் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து, காந்தி தெருவில் கடந்த வாரம் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோயிலுக்கு சொந்தமான குளத்தை மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிலர் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்தனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்ததின்பேரில் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர், அறநிலைத்துறை சார்பில் தடுப்பு சுவர் அமைத்து, இந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை மற்றும் கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டது. இந்த, கேமராக்களை சமீபத்தில் சிலர் சேதப்படுத்தினார்கள். இந்நிலையில், தடுப்பு சுவர்களை உடைத்து லாரி உள்ளே சென்று மண்ணை கொட்டி, ஆக்கிரமிப்பு செய்து வருவதாக வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீசார், இனி மண்ணை கொட்ட மாட்டார்கள், கோயிலுக்கு சொந்தமான டாக்குமெண்ட்களை எடுத்து வர சொல்லுங்கள் என கூறியதன்பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து, இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கோயில் நிர்வாக அதிகாரி குமரன் புழல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று வழங்கினார். அதில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் குளத்தை மீட்கக்கோரி அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காததால், இந்து அறநிலைய துறை கோயில் குளத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமா என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Department ,Hindu ,Buhalal ,Karyamanikka Perumal Temple ,Shivraj 3rd Street, Puhal ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...