×

துபாய் விமான கண்காட்சியில் பலி தேஜாஸ் போர் விமானி சடலம் கோவை கொண்டு வரப்பட்டது: கறுப்பு பெட்டியை கைப்பற்றி ஆய்வு

புதுடெல்லி: துபாய் விமான சாகசத்தின்போது விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானியின் சடலம் கோவை கொண்டு வரப்பட்டது. துபாயில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகச நிகழ்ச்சியின்போது கோவை சூலூா் விமானப்படை தளத்தை சேர்ந்த ‘தேஜாஸ்’ போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில், விமானத்தை இயக்கிய இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன்ஸ் சியால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பாகங்களை ஆய்வு செய்த மீட்புக் குழுவினர், விமானத்தின் மிக முக்கியப் பாகமான ‘கறுப்புப் பெட்டி’யை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

கறுப்பு பெட்டி முழுமையான ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த பிறகே விபத்துக்கான முழு பின்னணியும் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே துபாய் விபத்தில் பலியான விங்கமாண்டர் நமன்ஸ் சியால் உடல் நேற்று காலை கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டது. அங்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இமாச்சல் மாநிலம் காங்க்ராவில் உள்ள காகல் விமானநிலையத்திற்கு இன்று உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* கடைசி நேரத்தில் உயிர்தப்ப முயன்ற புதிய வீடியோ
தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதன் புதிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் விங் கமாண்டர் நமன்சின் கடைசி தருணங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. விமானம் தீப்பிடித்து எரியும் போது, ​​ஒரு பாராசூட் போன்ற பொருள் தெரியும். விமானி வெளியேற முயன்றார், ஆனால் அது மிகவும் தாமதமானதால் தீயில் கருகி பலியாகி உள்ளார்.

* பாக். அமைச்சர் இரங்கல்
துபாய் விமான கண்காட்சியின் போது விபத்தில் இறந்த இந்திய விமானப்படை மற்றும் விமானியின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* மகன் பலியான வீடியோக்களை பார்த்து தந்தை அதிர்ச்சி
துபாய் விமான கண்காட்சியில் விங் கமாண்டர் நமன்ஸ் சியால் பலியான வீடியோ காட்சிகளை அவரது தந்தை ஜெகன்நாத் சியால் யூடியூப்பில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இமாச்சல் மாநிலம் காங்க்ராவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் ஜெகன் நாத் சியால், தாயார் வீணா சியால் ஆகியோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் இமாச்சலில் இருந்து கோவையில் உள்ள மகன் வீட்டிற்கு தங்கள் 7 வயது பேத்தியை கவனிக்க வந்திருந்தனர். அவர்களுக்கு மகன் பலியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் படித்து கொண்டு இருக்கும் தனது மருமகளுக்கு போனில் தகவலை கூறியுள்ளார்.

Tags : Dubai Air Show ,New Delhi ,Dubai ,Goa ,International Air Show ,Gowai Sulu Air Force Base ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...