×

இறுதி காலம் வரை பல வழிகளிலும் தமிழுக்கு தொண்டாற்றியவர்: ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வசித்தவர். இறுதி காலம் வரை பல வழிகளிலும் தமிழுக்கு தொண்டாற்றியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில்:
மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந. செகதீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர். பேராசிரியர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர். அரிமா நோக்கு இதழின் ஆசிரியர் எனப் பல்வேறு பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகளும் எழுதிய நூல்களும் ஏராளம்.

தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாகக் கலைமாமணி, சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது. சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது. கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

நமது திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும், 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞரின் பிறந்தநாளில் கனவு இல்லம் திட்டம் திட்டத்தின்கீழ், அவருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வழங்கியிருந்தோம். மேலும், அவர் இயற்றிய ‘கீழடியில் கேட்ட தாலாட்டுகள்’, ‘நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (கவிதைகளும் கட்டுரைகளும்) ஆகிய நூல்களையும். வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள, ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த “மகாகவி” என்ற ஆவணப் படத்தையும் முதலமைச்சராக வெளியிடும் பேற்றினைப் பெற்றிருந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Chief Minister ,Erodu Tamilhanpan ,K. Stalin ,Chennai ,Erode Tamilhanban ,Yal Musical Theatre Forum ,
× RELATED கிண்டியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்;...