×

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநில அரசின் உரிமைகள் பறிப்பு: டி.ராஜா குற்றச்சாட்டு

ராஜபாளையம்: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக டி.ராஜா குற்றம் சாட்டினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நவ.23, 24ம் தேதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவை தீர்மானம், அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து எஸ்ஐஆர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். பீகார் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இணைந்து அனைத்து வகையான சாகசங்களையும் செய்து வெற்றி பெற்றுள்ளன. பீகார் தேர்தல் முடிவு தேர்தல் ஆணையம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தேர்தலை ஆணையம் சுதந்திரமான அமைப்பாகவும், தலைமை தேர்தல் ஆணையர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டும் செயல்பட வேண்டும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மத பிரிவினைவாதம், சிறுபான்மை, தலித், பழங்குடியினர், பெண்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தீவிரமாக செயல்பட துவங்கி உள்ளது. சனாதனம் என்ற பெயரால் ஜாதி கட்டமைப்புகள் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது.

பிரதமர் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா நினைவு தபால் தலையை வெளியிட்டது வெட்கக்கேடானது. மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டாட்சி சமத்துவம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. பாஜ மட்டுமின்றி அவர்களோடு சேரும் எந்த கட்சியானாலும் அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : state government ,BJP ,T. Raja ,Rajapalayam ,Communist Party of India ,Rajapalayam, Virudhunagar district ,national general secretary ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...