×

புளியரை சோதனை சாவடியில் கொரோனா, பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை தென்காசி கலெக்டர் ஆய்வு

செங்கோட்டை, ஜன. 7:  புளியரை சோதனை சாவடியில் கொரோனா மற்றும் பறவைகாய்ச்சல் தடுப்பு பணிகளை தென்காசி கலெக்டர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் தமிழகத்தில் நுழைவதைத் தடுக்கும்பொருட்டு தமிழக எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம், புளியரையில் கால்நடை துறை அதிகாரிகள் முகாம் அமைத்து நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் தீவிர சோதனை நடத்தி  வருகின்றனர்.

2ம் நாளான நேற்று இங்கு அமைக்கப்பட்ட கால்நடை துறை சோதனை சாவடியிலும், கொரோனோ தடுப்பு சுகாதார துறை முகாமில் முன்னெச்சரிக்கை பணிகளை தென்காசி கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும்பொருட்டு தென்காசி மாவட்ட எல்லையான புளியரையில் கால்நடை துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இச் சோதனைச்சாவடியில்  கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடைபராமரிப்பு உதவியாளர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பவர் ஆகியோர் அடங்கிய  குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைசாவடியில் கேராளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழித்தீவனங்கள், கோழி இறைச்சிகள், மற்றும் கோழிக்கழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக திருப்பி கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. மேலும் சோதனைச்சாவடி மூலம் கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்து தமிழகத்திகுள் அனுமதிக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் உள்ள 223 பதிவு செய்யப்பட்ட கோழிப்பண்ணைகளைச் சேர்ந்த உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோழிகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையின் மூலம் பறவைகள் கூடும் நீர்நிலையங்கள், பறவைகள் சரணலாயங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அங்கு வரும் பறவைகளுக்கும், வசிக்கும் பறவைகளுக்கும்  நோய் அறிகுறி தென்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
ஆய்வின்போது ஆர்டிஓ (பொ) ஷீலா,  கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் முகமது காலித், கால்நடைபராமரிப்புத்துறை உதவி இயக்குநர் வெங்கட்ராமன், கால்நடை உதவி மருத்துவர் ஜெயபால் ராஜா, கால்நடை ஆய்வாளர் சுவாமிநாதன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முப்புடாதி, அந்தோனியம்மாள் உள்ளிட்ட  பலர்  உடனிருந்தனர்.

Tags : Tenkasi Collector ,Puliyar ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...