பாடாலூர், நவ.22: குன்னம் சட்டமன்ற தொகுதி, அயினாபுரம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். பெரம்பலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்துள்ளது. இதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயினாபுரம் கிராமத்தில் ஒரு வாக்குச்சாவடி மையம் உள்ளது.
இந்த வாக்குச்சாவடி மையத்திற்குட்பட்ட பகுதியில் 767 வாக்காளர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் வாக்குச்சாவடி நிலை அலுவலகர் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவு பெற்றன. இந்த பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் செல்வி மற்றும் அவருக்கு உதவிய ஊராட்சி மன்ற கணினி இயக்குநர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்களை குன்னம் சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல்,
நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்வில், ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன், வருவாய் ஆய்வாளர் பாலகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
