- யூனியன் அரசு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- கமலாலயம்
- தி.நகர்
- தேசிய பொதுச் செயலாளர்
- தருண் சுக்
சென்னை: தமிழக பாஜ சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான கள நிலவரத்தை ஆய்வு செய்யும் கூட்டம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில் பாஜ தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பூத் முகவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அண்ணாமலை அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களை திறப்பதாக சொன்னால், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் பாஜ சார்பில் நாங்கள் பேசுகிறோம். அடுத்த ஆண்டே நிதி கிடைத்துவிடும். தமிழ் பல்கலைக்கழகத்தை திறக்காமல் எப்படி ஒன்றிய அரசு நிதி கொடுக்கும்? எந்த விவசாயிகளின் நெல்லும் மழையில் நனைய கூடாது என்று, நெல் கொள்முதல் நிலையங்களை கட்ட சொல்லி, ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு, தமிழக அரசுக்கு பணம் கொடுக்கிறது.
மெட்ரோ ரயில் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியாவில் 2010ம் ஆண்டு மெட்ரோ கொள்கை படிதான் எல்லா மாநிலத்துக்கும் கொடுக்கப்படுகிறது. மாநில அரசு மெட்ரோ கேட்டு விண்ணப்பிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், 2022ல் கேட்ட மெட்ரோ திட்டத்துக்கு, 2011 மக்கள் தொகையை கொடுத்திருக்கிறார்கள்.
வேண்டுமென்றே தவறான தரவுகளை தமிழக அரசு கொடுத்திருக்கிறது. மேலும், நிலம் கையகப்படுத்து போன்ற எந்த விவரங்களும் இடம் பெறவில்லை. எனவே, பல கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளதே தவிர, மெட்ரோ திட்டத்தை நிராகரிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
