சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக ஒன்றிய அமைச்சரை ஆசிரியர் பிரதிநிதிகளுடன் சந்திக்க இருக்கிறேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2011ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
அதன்பேரில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்தது. இந்நிலையில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அதை திரும்ப வாபஸ் பெறப்பட்டு, அதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது.
இதுதொடர்பாக பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எப்படி தகுதித் தேர்வு நடத்துவது, தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் எப்படி வைப்பது உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டன. மேலும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பிறகு தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து அவர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கருத்து கேட்க ஏற்பாடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டது.
அதன்படி நேற்று மாலையில் 55 ஆசிரியர் சங்கங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து கருத்து கேட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த 48 மணி நேரத்தில் உங்களை அழைத்து ஆலோசிக்கப்பட்டது. அரசின் சொத்தாக இருக்கின்ற ஆசிரியர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்பதையும் அந்த கூட்டத்தின் வலியுறுத்தியுள்ளேன். டிசம்பர் மாதம் ஆசிரிய கல்வி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு ஒன்றி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க இருக்கிறேன்’’ என்றார்.
* டிசம்பர் மாதம் ஆசிரிய கல்வி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு ஒன்றி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க இருக்கிறேன்.
