- தலைமை நீதிபதி
- இந்தியா
- பிஆர் காவாய்
- புது தில்லி
- தலைமை நீதிபதி
- பிஆர்
- கவாய்
- இந்தியாவின் தலைமை நீதிபதி
- உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: நாட்டுக்காக என்னால் முடிந்ததைச் செய்த திருப்தியுடன் விடைபெறுகிறேன் என்று பதவி விலகும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார். இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் வரும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவரது பணி இறுதிநாள். இதையடுத்து இறுதிநாள் அமர்வில் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யாகாந்த், நீதிபதி கே.வினோத்சந்திரன் அமர்வில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வழக்கு நடத்தினார். இறுதியில் அவர் கூறும்போது,’ 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த எனது நீதித்துறை பயணத்தின் முடிவில் முழு திருப்தி மற்றும் மனநிறைவுடன் விடை பெறுகிறேன்.
ஆனால் என்றும் நான் நீதியின் மாணவராக இருப்பேன். உங்கள் அனைவரையும், குறிப்பாக அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி மற்றும் கபில் சிபலின் கவிதைகளையும், நீங்கள் அனைவரும் வெளிப்படுத்திய அன்பான உணர்வுகளையும் கேட்ட பிறகு, என் குரல் உணர்ச்சிகளால் திணறுகிறது. நான் கடைசியாக இந்த நீதிமன்ற அறையை விட்டு வெளியேறும்போது, இந்த நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது, முழு திருப்தி உணர்வுடன், இந்த நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன் என்ற முழு மனநிறைவுடன் விடை பெறுகிறேன். நன்றி. மிக்க நன்றி’ என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பி.ஆர்.கவாய் விடைபெற்றார். புதிய தலைமை நீதிபதி சூர்யாகாந்த் வரும் திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்.
